Saturday, 2 November 2019

பழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்

‘பழனம்’ என்றால் ‘வயல்’ என்று பொருள். வயல் சூழ்ந்த ஊருக்கு ‘பழனி’ என்று பெயர் ஏற்ப்பட்டது.
பள் > பள > பழ > பழனம் > பழனி
‘பழன மள்ளர்’ என்று பேரூர்ப் புராணம் – திருநாட்டுப் படலம் செய்யுள் 38 கூறுவது காண்க.

பழனமள்ளர்
“மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி அலையினிற் கவர்ந்து கொள்ளை யாயர்தம் புறங்கண் டன்னோர் விளையிழு தழுதந் துயித்து மேற்சொலப் பழன மள்ளர் குலைதொறும் பறைக ளார்ப்பக் கொம்மென வெதிர்சென் றாரால்” (குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.76 )

“மலைகளில் இருந்து வைரமும், செம்பொன்னும், யானைக் கொம்புகளும் முத்துக்களும், சந்தனம் முதலான பொருட்கள் ஆற்று நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லை நில இடையர்களைப் புறம்கண்டு, அவர்களின் விலை மிக்க பொருளாகிய பால்,வெண்ணை இவைகளை உண்டு, மேலே பெருக்கெடுத்து வர வயல்களுடைய மள்ளர்கள் கரைகள் தோறும் பறைகள் முழங்க விரைந்து எதிர் சென்று வரவேற்றனர் என்கிறது மேற்கண்ட செய்யுள்.
தென் பழனிப் பள்ளியின் அழகு குறித்து வையாபுரிப் பள்ளு செய்யுள் 3 கூறுவது காண்க.

“மஞ்சள் மணம் வீசிய மெய்யும் கெஞ்சிப் பேசி யாடிய கையும் மலைமுலையுஞ் சுமையினா னையும் மருங்கலகுப் பையும் பஞ்சிளைக் கொண்டைகளென விழியும் கிஞ்சுகவாய்ப் பசுங்கிளி மொழியும் பாக்குத் தான் தின்றபல் லொளியும் படர் ரோம விழியும் ரஞ்சித மிஞ்சிய கொண்டைச் சொருக்கும் மஞ்சனப் பின் புரஞ்சரிந்திருக்கும் நாடினவர் மணத்தை யுமுருக்கும் நடை செல்லுஞ் செருக்கும் செஞ்சந்தனப் பொட்டொளி மின்ன அஞ்சன மா மட மயிலென்னத் தென்பழனிப் பள்ளியும் வந்து தோன்றினாளே “
இப்படியாகப் பழனி ஊருக்கும், பள்ளர் குலத்தாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் சிறப்பு வாய்ந்ததாகும்.(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.67 )

பழனி முருகன் கோயில் ‘தேவேந்திர குல வேளாளருக்குச் சொந்தமானது’ என்கிறார் பீபிகுளம் செல்வராசு. தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் மறவர் குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. ‘நம் வேர்கள்’ (சுறவம் 2037 – பிப்ரவரி 2006 பக்கம், 12 ,13 ) மாத இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் வருமாறு:

“சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன் கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப் பட்டையம் உறுதி செய்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 – 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 – 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.

இந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.

விசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 – 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான்.

மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.

அக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில் ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது ” என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )
(பழனி செப்புப் பட்டயத்தின் தகவல்கள் தனியாக இங்கே பதிப்பிக்கப் படும். அதன் விவரம் இங்கே தரப்படும்)
பழனி முருகன் கோயிலில் பள்ளர் குலத்தவர்களுக்கு இருந்த உரிமைகள் வடுகராட்சி ஏற்பட்ட பின் படிப்படியாகப் பறிக்கப்பட்டு முற்றிலுமாக இக்கோயிலில் இம்மக்களுக்கு இருந்த தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் 1990 களில் குருசாமி சித்தரால் இப்பட்டையம் வெளிக்கொணரப் பட்டதால் மீண்டும் வரலாறு திரும்பியது. அக்கால கட்டத்தில் பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் முன்னெடுத்த ‘இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில்’ பள்ளர் குலத்தவர்களுக்கு உரிமையுடைய பழனி முருகன் கோயில் சொத்தான நெல் விளையும் வயல்களும் மீட்கப் பட்டது. அவ்வாறே பிள்ளை சாதியினரால் பறிக்கப் பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திர்க்குச் சொந்தமான மடமும் மீட்கப் பட்டது. இப்போராட்டத்திற்க்குப் பின் தொடர்ந்து இன்றளவும், பழனி முருகன் கோயிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும், மண்டகப் படி உரிமையும் வழங்கப் பட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.