தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் நெல்லின் மக்களாம் (மள்ளர்)
பள்ளர்களுக்கு வழங்கிவரும் மரபுரிமை குறித்து கட்டுரைகளை இங்கே காண்போம்.
‘தாழ்த்தப்பட்டோருக்கான ஆலைய நுழைவு போராட்டம்’ என்பது போன்ற
சம்பவங்களுக்கும், மள்ளர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், மரபு
வழியாகவே மள்ளர்களுக்கு அதி முக்கிய கோவில்களில் இன்றும் முதல் மரியாதை
இருந்து வருவதும் கண்கூடு.
பாண்டிய நாட்டில் உள்ள பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் பொருநை
ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில்
அமைந்துள்ள ‘திருநெல்வேலி’யின் வரலாற்றுப் பழம் பெயர் ‘மருத வேலி’
என்பதையும், இது மள்ளர் ஊர் என்பதையும், இதுவே பாண்டிய நாட்டின் தலைநகர்
என்பதும் வரலாறு. வயல்வெளிகள் சூழ்ந்த மள்ளர் ஊரான பழம் பாண்டி நாட்டின்
தலைநகராக விளங்கிய ‘மருத வேலி’ என்பதே பின்னர் ‘நெல் வேலி’ என
வழங்கப்பட்டது. நெல்லின் மக்களான மள்ளர்கள் நெல்லை அடித்துப் பிரித்துக்
குவித்திருந்த வேளை ஒரு நாள் பெரும் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டதாம். அவ்வெள்ள ஓட்டத்தில் நெற்குவியல்கள் அடித்துச் செல்லாதபடி
பாண்டிய வேந்தன் ஒருவன் தனது மள்ளர் படை கொண்டு வேலியிட்டுக் காத்ததுபோல
காத்தானாம். இக்காரணம் பற்றியே ‘மருதவேலி’ என்பது ‘நெல்வேலி’ எனப் பெயர்
மாற்றம் பெற்றதாகவும், அப்பாண்டிய வேந்தனே ‘நெல்லையப்பர்’ என நெல்லின்
மக்களான மள்ளர்களால் போற்றப்பட்டதாகவும் தெரிகிறது. பிற்காலத்தில்
‘திருநெல்வேலி’ என்றானது. திருநெல்வேலி தலபுராணம் என்ற நூல் இவ்வூரினை
‘மருதவேலி’ என்றும், பாண்டிக் கோவை என்ற நூல் இவ்வூரினை ‘நெல்வேலி’ என்றும்
குறிக்கின்றன.
நெல்லையப்பர் கோயிலின் முகாமையான கருவறையைச் சுற்றியுள்ள நடைக்கூடத்தை –
திருச்சுற்று மண்டபத்தை கட்டியவன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
ஆவான். (கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு, ப. 279). இக்கோயிலில் ஆடி மாதம்
தொடங்கி 45 நாள் நடைபெறும் பூசையில் பள்ளர் குலப் பெண் அம்பிகையாக நெல்
கொண்டு காட்சியளித்தல் பார்க்கத் தக்கது. நெல்வேலி கட்டின திருவிளையாடல் தை
மாதம் நடைபெறும். இக்கோயிலின் நடு மண்டபத்தில் பாண்டியர்களின் உருவத்தைக்
காணலாம். (பாண்டிய நாட்டு கோயில்கள், ப.98 ). அறிவர் குணா நெல்லையப்பர்
கோயிலை நேரில் வந்து கள ஆய்வு செய்து இதனை ஐயனார் கோயில் என்றே அறிதியிட்டு
உறுதி செய்கிறார். ஐயனார் பாண்டியரின் படைத் தலைவன் என்பது நினைவில்
கொள்ளத்தக்கது. ‘இந்நகரில் உள்ள சிந்துபூந்துறையில் ஒரு நாள் நீராடினவர்
பதினாயிரம் கிரிச பலன் அடைவர்’ என ‘நகர்பெருமை’ என்ற தலைப்பில்
நெல்லையப்பர் கோயில் தன வரலாறு கூறுகிறது.(அருள்மிகு நெல்லையப்பர்
திருக்கோயில் தலவரலாறு,ப.11 ).
நெல்லையப்பர் கோயிலுக்கு ஏறத்தாழ 512 குறுக்கம் நன்செய் நிலங்களும்,
2960 குறுக்கம் புன்செய் நிலங்களும் உள்ளன. இந்நிலங்கள் தென்பத்து, பாட்டப்
பத்து, கனடியப்பேரி, அருகன்குளம், சேந்தி மங்கலம், மேலப் பாளையம், பெரிய
பாளையம், பல்லிக் கோட்டை ,நான்சான்குளம், தென்கலம், மணிமூர்த்தீசுவரம்,
பிரான்சேரி,தெய்வேந்திரபேரி, சேரன்மகாதேவி, சுப்பிரமணிய புறம், செட்டிக்
குறிச்சி, திருப்பணி நெடுங்குளம், பூவாணி ஆகிய ஊர்களில் உள்ளன. (அருள்மிகு
நெல்லையப்பர் திருக்கோயில் தலவரலாறு, ப.29 ). நெல்லையப்பர் கோயிலுக்குச்
சொந்தமான விளை நிலங்கள் உள்ள மேற்கண்ட ஊர்கள் யாவும் பள்ளர் குலத்தவர்களின்
ஊர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நெல்லையப்பர் கோயிலில் முதல் மரியாதையும், தேரோட்டும் உரிமையும்,
தென்பத்துப் பள்ளர்களுக்கே உரியதாகும். இக்கோயில் தேர்த் திருவிழாவின் போது
‘தேவேந்திர குல வேளாளர்’ சமூகக் கொடியான ‘சிவப்பு பச்சை’ வண்ணக் கொடி
தேரில் பறக்க விடப்பட்டே திருவிழா நடைபெறுகிறது. (நேர்காணல், ஆ.மனோன்மணி,
தென்பத்து)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.