Saturday, 2 November 2019

பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்

மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் ‘முருகன் கோயில்’ என்று தற்போது வழங்கப்படும் கோயில் பாண்டிய அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் அவனது படைத்தலைவனான சாத்தான் கணபதியால் கலியாண்டு 3874 இல் (கி.பி.773 ) தோற்றுவிக்கப் பட்ட மிக அழகியதோர் குடைவரைக் கோயிலாகும்.(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ) பாண்டியர் குடைக் கோயில்களுள் சிற்ப அமைப்பிலும், செறிவிலும் இக்கோயில் ஈடு இணையற்றது ஆகும்.
பாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரத்தில் இருக்கும் இவ்வூரில் உள்ள மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இவ்வூர் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்றுத் திகழ்கிறது. (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.6 ) மலையடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலின் பெரும் பகுதி மலையின் வட பகுதியில் இணைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து மலையின் நடுப்பகுதி வரை ஏறிச் செல்லச் சிறிய படிக்கட்டுகள் செங்குத்தான பாறையில் அமைக்கப் பட்டுள்ளன. மலை மீது ஒரு குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. அதில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் வருமாறு.

“எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன் செய்த ஆய்சதன நெடுஞ்சாதனம்”
(குருசாமி சித்தர், தே.ஞானசேகரன், மீண்டெழும் மள்ளர் வரலாறு,ப.39 )
(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.30 )

என்ற அடியால் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் எனத் தெரிகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் அப்டியில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறும் போது ‘மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன’ என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன. இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு. இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் ‘பரிவட்டம்’ கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.
முருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது. தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் ‘மறு வீட்டிற்கு அழைத்தல்’ விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள ‘தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு’ அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டியானை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)
முருகன் தெய்வானை ‘தேவேதிர குல வேளாளர் சமூக மடத்திற்கு’ மறு வீடு வருதல் நிகழ்வு முடிந்த பின், அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.

மதுரை மாடக்குளம் மரபு வழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிருவாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு ‘பரிவட்டம்’ கட்டப் படுகிறது. பின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி, பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

தற்போது மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாகத் தொழிலதிபர் வி.கே.துரை,உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊருக்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பால சுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப் படி வழங்கப் படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்ப்கின்றது. (நேர்காணல், ப.ராம்குமார்,வத்தலகுண்டு)

பள்ளர் குலத்தாரின் ‘பரிவட்டம்’ மரபுரிமை முறையானது பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டுப் தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப் படுகின்றது. இதம் மூலம் மதுரை மாடக்குளம் பாண்டியராட்சியின் போது நிருவாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததென்பது தெரிய வருகின்றது. பாண்டியர் காலச் செப்பேடுகளில் ‘மதுரை மாடக்குளம்’ இடம் பெர்ருள்ளதேன்பது இவ்வரலாற்றுக் கருதுகோளுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும் சான்றாதரமாகும்.

திருப்பரங்குன்றம் கோயில் முன் பகுதியில் கிழக்கு திசையில் பள்ளர் தெரு உள்ளது. தற்போது இங்கே 100 வீடுகள் உள்ளன. இதில் 25 குடும்பங்கள் நிலக்கிழார்களாக உள்ளனர். இன்றளவும் இக்கோயில் நிலங்க ( 4 ஏக்கர் ௦௦ 0.7 சென்ட்) (சர்வே எண்: 348 – 1 , 348 – 5 ) பள்ளர்களுக்கு உரிமையுடையதாக உள்ளது. இந்நிலங்கள் காயாம்பு,வரதாரம் (348 /1 இல் 1 -91 ஏக்கர்), அருணாச்சலம் (348 /5 இல் 0 – 53 ஏக்கர்), இருளன் (348 /1 இல் 1 – 06 ஏக்கர்), மலையடியான் (348 /5 இல் 0 – 53 ஏக்கர்) என ஐந்து பள்ளர்களின் பெயர்களில் உள்ளது. இந்நிலங்களை இவ்வுரிமையாளர்களில் ஒரு சாரார் கமுக்கமாக 27 .07 .1955 அன்று துரைச்சாமி பிள்ளை மகன்கள் முத்தையா பிள்ளை,கந்தசாமி பிள்ளை ஆகியோருக்கு விற்று விட்டனர். இதனை அறிந்த மற்றொரு சாரார் வழக்கு தொடுத்து (வழக்கு எண்: பிரிவு 8 (2 )(1 ) பி-யின் கீழ் 348 /1 பாகம் 0 -32க்கு சட்டம், பிரிவு 21 8 (2 ) (11 ) – இன் கீழ்) நிலத்தை மீட்டனர். பண்ணைப் பள்ளனான நிலக்கிழார் ம.மணி என்பவர் மலையடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசகராகவும் விளங்குகின்றார். இவர் பூணூல் தரித்துள்ளார். இஃது தமிழர் மரபாகும்.

திருப்பரங்குன்றம் கோயில் மதுரை மீனாட்சி சுந்தர பாண்டியன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ளதென்பதைக் கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பெரிய தேரோட்டும் உரிமையை இடைக்காலத்தில் பள்ளர்கள் இழந்துள்ளனர். சிறிய தேரோட்டும் போது பள்ளர்கள் முதல் மரியாதை பெற்று தேரோட்டுகின்றனர்.

ஆண்டிற்கு இரு முறை கார்த்திகை தை மாதங்களில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயில் ஆவணங்களில் பதிவு பெற்றுள்ள ‘பண்ணைப் பள்ளன்’ மிராசு (நிலக்கிழார்) கந்தக் குடும்பன் மகன் மலையடியான் என்பாரது மகன் மணி என்னும் பள்ளர் குலத்தவர் ‘வெள்ளை வீச’ தேவேந்திரர்களின் தேர் தெரு வீதிகளில் உலா வருகிறது. திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவில் சாவு விழுந்தால் கோயில் வாயிலுக்கு மேள தாளத்துடன் சென்று இறந்தவர் ஆணாக இருந்தால் ஒரு வேட்டியும், மாலையும், பெண்ணாக இருதால் ஒரு மாலையும், சேலையும் பெற்றுக் கொண்டு பின்னரே இறந்து போன பள்ளர்-பள்ளத்தியரின் உடலங்கள் சவ அடக்கம் செய்யப் படுகிறது. இவ்வழமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பாண்டியர்களால் கட்டப் பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கு பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள் இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.